நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது, பெரியார் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை தெரிவித்தார். அதிலும், தந்தை பெரியார் உடல் இச்சை பற்றி கூறியதாக சீமான் கூறிய கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பின. இதையடுத்து, சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பல்வேறு அரசியல் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும், சீமான் மீது காவல்நிலையத்தில் வழக்குகள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ”சீமான் ஒரு கருத்தை பதிவு செய்தார் என்றால் அதற்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்..? அவர் ஒரு கருத்து வைத்தால் அதற்கு அவர் தான் பதில் சொல்ல வேண்டும். பெரியார் என்பவர் யார் என்று உலகத்திற்கு தெரியும்.. தமிழக மக்களுக்கு தெரியும். அவர் வாழ்ந்து அவருடைய சரித்திரத்தை நிரூபித்து இறந்துவிட்டார்.
இறந்து போனவர்களை பற்றி ஏன் இப்போது பேசி அரசியல் ஆக்குகிறார்கள் என்று தெரியவில்லை. அவர் இருந்த காலங்களில் சரித்திரங்கள் படைத்துவிட்டு சென்றார். அதனை யாராவது சொல்ல முடியுமா..? வாய் இருக்கிறது என்று ஏதேதோ பேசக்கூடாது. கொச்சையாகவும் பேசக்கூடாது. வாழ்ந்து மறைந்த தலைவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை பற்றி தவறாக பேசும் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என தெரிவித்துள்ளார்.