”இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்” என்ற வசனத்திற்கு சொந்தக்காரரான பி.எஸ்.வீரப்பாவின் 112-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை தமிழ் சினிமா வெற்றிகரமாக நகர்வதற்கு மிக முக்கிய காரணம் அதன் கதாபாத்திரங்கள் தான். எத்தனை பெரிய கதை அம்சமாக இருந்தாலும் அந்த கதாபாத்திரம் தான் கதையை மிக ஆழமாக ரசிகர்கள் மனதில் பதிய வைக்கிறது. உணர்வுகளை கடத்துவதில் அந்த கதாபாத்திரம் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதுதான் திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம்.
அப்படிப்பட்ட எத்தனையோ கதாபாத்திரங்களை இந்த சினிமா கண்டுள்ளது. அதில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தான் நடிகர் பி.எஸ்.வீரப்பா. இவரை நினைத்தாலே மனதில் அனைவருக்கும் அந்த காலத்தில் மிகப்பெரிய அச்சம் ஏற்படும். முகபாவனைகளோடு இவர் பேசும் வசனங்கள், வார்த்தைகளால் மற்றவர்களை கொன்று விடுவார். அந்த அளவிற்கு இவருடைய வசனங்கள் மக்கள் மனதில் அழியாமல் இன்று வரை வாழ்ந்து வருகிறது.
ஒருவர் உச்சம் தலையில் இருந்து உள்ளம் கால் வரை எப்படி நடிக்க முடியும் என்று ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியவர். நடுங்கும் அளவிற்கு மிகப்பெரிய வில்லத்தனத்தை ரசிகர்கள் மத்தியில் பதித்து வைத்தவர். எந்தவிதமான கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்து கொடுக்கக் கூடியவர். ஆனால் பி.எஸ்.வீரப்பா என்றால் வில்லத்தனமும், அவரது சிரிப்பும் தான் மிகப்பெரிய பெயரை பெற்று கொடுத்தது. வில்லனாக நடிக்கும் அத்தனை நடிகர்களுக்கும் இவர்தான் மிகப்பெரிய இடத்தைப் பிடித்துக் கொடுத்தார்.
காங்கேயத்தில் கலை தேவி கண்டெடுத்த இந்த காளை தான் இந்த வீரப்பா. மிகவும் கட்டுக்கோப்பான குடும்பத்தில் பிறந்த இவர், இயல்பிலேயே முரட்டு குணம் கொண்டவர். பண தேவைக்காக சிறுவயதிலேயே தொழில் தொடங்கியுள்ளார். பிறகு திருவிழா நேரங்களில் போடப்படும் நாடகங்களில் நடித்து வந்துள்ளார். பலரும் இவரது நடிப்பை பாராட்டியதால், பெரிய திரையில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இவருக்கு தோன்றுகிறது. அதன் பிறகு சென்னை நோக்கி வந்த இவர் மணிமேகலை என்ற திரைப்படத்தில் சிறிய வருடத்தில் நடித்தார்.
அவ்வளவுதான் தமிழ் சினிமா முழுவதுமாக இவரை மிக அருமையாக பயன்படுத்திக் கொண்டது. இவருடைய மிகப்பெரிய தனித்துவம் என்னவென்றால், இவருடைய சிரிப்புதான். சிரிப்பிலேயே எதற்கு நடுக்கத்தை கொடுக்கக்கூடிய, மிக வில்லத்தனமான சிரிப்பை கொண்டவர். எம்ஜிஆர் நடிப்பில் வெளியான சக்கரவர்த்தி திருமகள் என்ற திரைப்படத்தில் இவருடைய சிரிப்பு ஒலிக்க ஆரம்பித்தது. பிறகு அனைத்து படங்களிலும் இவருடைய சிரிப்பை முத்திரையாக மாற்றியுள்ளார். இவருடைய தனித்துவத்தை புரிந்து கொண்ட எம்ஜிஆர், அவருடைய அடுத்தடுத்த திரைப்படங்களில் வீரப்பாவை இணைத்துக் கொண்டார்.
எம்ஜிஆர் கடைசியாக நடித்த மதுரை மீட்ட சுந்தரபாண்டியன் திரைப்படத்திலும் இவர் தான் வில்லனாக நடித்தார். அலிபாபாவும் 40 திருடர்களும் என்ற திரைப்படத்தில் இவரை கண்டாலே அனைவரும் அச்சப்படும் அளவிற்கு நடித்திருப்பார். மகாதேவி திரைப்படத்தில் இவர் பேசும் வசனங்கள் அனைத்துமே இன்று வரை மறக்க முடியாத வசனங்களாகும். மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி.. என்று இவர் கூறும் வசனம் படத்தை பார்த்தவர்களால் இதுவரை மறக்க முடியாது.
தயாரிப்பாளராக உருவெடுத்த பிஎஸ்சி வீரப்பா, மிகப் பெரிய வெற்றி படங்களை கொடுத்தாலும் இறுதி காலத்தில் சில படங்கள் தோல்வியாக அமைந்த காரணத்தினால் வாழ்க்கையில் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றார். இருப்பினும் இன்று வரை இவரது இடத்தை நிரப்புவதற்கு இன்னொருவர் வரவில்லை என்று கூறினால் அது மிகையாகாது. கலைத்தாயின் மகனாக பிறந்த வீரப்பாவின் 112 பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமாவை வேறொரு தளத்திற்கு அழைத்துச் சென்ற இந்த ஆகச்சிறந்த கலைஞனுக்கு நமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.