தற்போதைய காலகட்டத்தில் ஏசியும் வீட்டில் அத்தியாவசியப் பொருளாக மாறிவிட்டது. அலுவலகங்கள், கார்கள், வீடுகள், உணவகங்கள், ஓட்டல்கள் என பல இடங்களில் ஏசி இல்லாமல் இருப்பதில்லை. அந்த அளவிற்கு அவற்றின் தேவையானது மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதுமட்டுமின்றி இன்னும் வரும் காலத்தில் ஏசி இல்லாமல் மக்களால் வாழவே முடியாது என்ற நிலைக்கு தள்ளப்படலாம்.
ஆனால், ஏசியில் நீண்ட நேரம் இருந்தால் பல பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகிறது. ஏசி, உடலுக்கு குளிர்ச்சியான காற்றை வழங்குகிறது. ஆனால், ஏசி காற்றை அதிகமாக சுவாசிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் பல இருக்கின்றன. குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு சுவாசம் மற்றும் தோல் பிரச்சனைகள் ஏற்படும். பெரியவர்களுக்கும் பல பக்கவிளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது.
குமட்டல் – தலைவலி :
ஏசி ஆன் செய்யும்போது, வெளிக்காற்று உள்ளே வர வாய்ப்பு குறைவு. இதனால் அங்குள்ள காற்றை சுவாசிப்பதால் குமட்டல் ஏற்படுகிறது. இதுவும் வாந்தி, தலைவலி வரவும் வாய்ப்புகள் உள்ளன. தலைவலியால் அவதிப்படுபவர்கள் ஏசியில் இருந்து விலகி இருப்பது நல்லது.
நீரிழப்பு :
நீண்ட நேரம் ஏசியில் இருப்பது குளிர்ச்சியாக இருக்கும். இதனால் அதிக வியர்வை ஏற்படாது. இதன் காரணமாக அதிக தாகம் எடுக்காததால், குறைவாகவே தண்ணீர் குடிக்கிறோம். இப்படி தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் உடலில் நீர் சத்து குறைய வாய்ப்பு உள்ளது.
உடல் வலிகள் :
நீண்ட நேரம் ஏசியில் தங்கி அந்த காற்றை சுவாசிப்பதால் உடல் வலி வர வாய்ப்புள்ளது. உடலும் மரத்துப் போகும். ஏசியில் இருக்கும்போது மூட்டு வலி வந்தால், அதிலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதுமட்டுமின்றி, கீழ் முதுகுவலியும் அதிகமாக வரும் என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.
உலர் அரிப்பு தோல் :
ஏசியில் இருப்பதால் குளிர் அதிகமாக இருக்கும். இந்த குளிர்ச்சியின் காரணமாக தோல் விரைவில் வறண்டுவிடும். இதனால் அவர்கள் மந்தமாக காட்சியளிக்கிறார்கள். அதுமட்டுமின்றி, குறைந்த அளவு தண்ணீர் எடுப்பதால், ரத்த ஓட்டம் நடக்காது. உடலில் ஈரப்பதம் குறையும்.