இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்டது குறித்து விவாதப் பொருளாக மாறிய நிலையில், அவரை விட்டு விடுங்கள் என்றும் அரசியல் விளையாட்டை அரசியல்வாதிகளோடு நடத்துங்கள் என்றும் திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
திமுக நாளிதழான முரசொலியில் வெளிவந்த செய்தியில், ”இசைஞானி இளையராஜா ஒரு உண்மை படைப்பாளி. அவரை விவாதப் பொருளாக்கி, அவர் இலக்கை மடைமாற்றி திசை திருப்பாதீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு நியமன எம்.பி. பதவி வழங்கப்பட்ட செய்தியை ஒருசிலர் விவாதப் பொருளாக்கியுள்ளனர். அவருக்கு அளிக்கப்பட்ட பதவிக்கு சாதிச் சாயம் பூசுகின்றனர். அவர் சாதிகளைக் கடந்தவர், மதங்களைக் கடந்தவர் என்பதால் தான் அவருக்கு, இசைஞானி என்ற பட்டத்தை கருணாநிதி தந்து பாராட்டினார்.
ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பசுத்தோல் போர்த்தி வந்தாலும், ஆட்டுத்தோல் அணிந்து வந்தாலும் அதன் உண்மைச் சொரூபத்தைத் தோலுரித்துக் காட்டிடுவோம். உங்கள் அரசியல் எத்து விளையாட்டுகளை அரசியல் வாதிகளோடு நேரடியாக நடத்திடுங்கள். படைப்பாளிகளை அதில் பகடைக் காயாக்கக் கருதாதீர்கள். நாடாளுமன்ற மேலவைப் பதவி தந்ததன் மூலம், இளையராஜாவைப் பெருமைப்படுத்தியது போல பேசாதீர்கள். அவரது உலகம் வேறு, அந்த இசை உலகின் உச்சப் பதவிகள், பட்டங்கள் பலவற்றை அவர் பெற்றுவிட்ட நிலையிலும், அவரது தாகம் தணியவில்லை, வேகம் குறையவில்லை.
நிறைய சாதிக்க வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார். இளையராஜா வர்ணாசிரம தர்மப்படி தலையில் பிறக்கா விடினும், இசை உலகம் அவரைத் தலையில் தாங்கி கொண்டாடிக் கொண்டிருக்கிறது. தலையில் பிறந்தவர்களுக்கே எல்லாத் தகுதியும் என்று கூறித் திரியும் கூட்டத்தின் தலைகனத்தைத் தகர்த்து, இசைப் பேருருவாய் எழுந்து நிற்கும் அந்த இசைஞானியை – இசைப் பேரொளியை, உங்கள் அரசியல் ஆதாயத்துக்குப் பரப்புரை நடத்திடப் பயன்படுத்தாதீர்கள். அவரை விட்டு விடுங்கள்..! அவர் ஒரு படைப்பாளி. அவர் சிந்தனையோட்டத்தைச் சிதறடித்து விடாதீர்கள்” என முரசொலி நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.