மொட்டை மாடிகளில் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பாடியைச் சேர்ந்த பாலசந்தர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் அனுமதி பெற்ற இடத்தை விடுத்து அனுமதியில்லாத பகுதிகளில் சட்டவிரோதமாக செயல்படும் பார்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அண்ணாநகரில் உள்ள மால் ஒன்றில் மொட்டைமாடி பாரில் நடந்த விருந்தின்போது ஒருவர் மரணமடைந்ததை அடுத்து அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற மொட்டைமாடி பார்களில் மதுபானங்கள் தவிர மற்ற போதைப்பொருட்களும் உபயோகிக்கப்படுவதாக மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாமல் இந்த வழக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அபராதம் விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து, மனுவை திரும்பப் பெற மனுதாரர் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று, மனுவை வாபஸ் பெற அனுமதித்து வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.