கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்வு. கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் என்பவர் உயிரிழப்பு.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை மொத்தம் 211 பேர் அனுமதிக்கப்பட்டனர். இது வரை 4 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 105 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் என 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு வெண்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.