கையில் பாம்புடன் வீடியோ வெளியிட்டு யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
சர்ச்சைகளில் சிக்குவதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் கோவையைச் சேர்ந்த யூடியூபர் டிடிஎஃப் வாசன். முன்பு அதிவேகமாக பைக் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, ‘மஞ்சள் வீரன்’ படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகி விலகியது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார். அந்த வரிசையில் தற்போது, தனது கையில் பாம்பு ஒன்றை சுற்றியபடி வீடியோ வெளியிட்டுள்ளார் டிடிஎஃப் வாசன்.
2 வயதாகும் அந்த பாம்புக்கு பப்பி எனப் பெயரிட்டுள்ளதாகவும், மகராஷ்டிரா வனப்பகுதியில் இருந்து கொண்டு வந்ததாகவும் டிடிஎஃப் வாசன் தனது யூடியூப்பில் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்துள்ளார். கையில் கட்டியிருக்கும் அந்த பாம்பிற்கு முத்தமிட்டு கொஞ்சுகிறார். அந்த பாம்பிற்கு தானே தாய், தந்தையாக இருந்து பாதுகாப்பு கொடுப்பேன் எனவும் கூறியிருக்கிறார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.