கோவை மாவட்டத்தில், மகனை இழந்த சோகத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .சிவகாசி பூலாவூரணி கிராமத்தை சேர்ந்தவர் பழனிசாமி (39). இவருக்கும் சிவகாசி பகுதியை சேர்ந்த வத்சலா (35) என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 7 வயதில் மகன் இருந்தான். இவர்கள் குடும்பத்துடன் கோவை வேடப்பட்டி ஸ்ரீநகரில் வசித்து வந்தனர். பழனிசாமி வீட்டில் இருந்தபடி சிறுவர்களுக்கு டியூசன் எடுத்து வந்தார். இவர்களது ஒரே மகன் கடந்த ஏப்ரல் மாதம் மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
தங்கள் மகன் உயிரிழந்ததில் இருந்தே பழனிசாமி மற்றும் வக்தசலா இருவரும் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். இதையடுத்து இருவரும் தற்கொலை முடிவை எடுத்து கடந்த 2ம் தேதி கோவை காந்திபுரம் நேரு தெருவில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். அதன் பின்னர் அவர்கள் வெளியே வரவில்லை. நேற்று முன்தினம் மாலை வரை அவர்களது அறைக்கதவு உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் மாற்று சாவி மூலம் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.
அப்போது விடுதி அறையில் இருவரும் சடலமாக கிடந்தது தெரிய வந்துள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது சடலத்தையும் மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, இத்தம்பதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக எழுதிவைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், ‘எங்களது ஒரே ஆசை மகனை இழந்து விட்டோம். அவனை எங்களால் மறக்க முடியவில்லை. இதனால் நாங்கள் உயிரை மாய்த்துக் கொள்கிறோம். எங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து அவரகளது உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இது குறித்து மேற்கொண்டு காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவையில் மகன் இறந்த துக்கம் தாளாமல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Read more ; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்….! முழு விவரம்