பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி, கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரியில் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) தலைவர் ஓஎம்ஏ சலாம் வீடு உட்பட பிஎஃப்ஐ அமைப்பின் மாநில, மாவட்ட அளவிலான தலைவர்களின் வீடுகளில் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கடலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, தென்காசி உள்ளிட்ட பல இடங்களில் பிஎஃப்ஐ அலுவலகங்கள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.
பின்னர் 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளிலும் அலுவலகங்களிலும் மாநில காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைகளின் அடிப்படையில் பிஎஃப்ஐ மற்றும் SDPI அமைப்புகளின் நிர்வாகிகள் ஏறத்தாழ 250 பேர் கைது செய்யப்பட்டனர். இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்றது. கடந்த 28ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோதமானது என மத்திய அரசு அறிவித்தது. மேலும், பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா பிஎஃப்ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.