தமிழ்நாட்டில் அடுத்த 8 மாதங்களில் 1,252 கிராமங்களில் தடையில்லா இணையதள வசதி கிடைக்கும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமையில் இ ஆஃபீஸ் அமைப்பது தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, தமிழக கேபிள் டிவி தலைவர் குறிஞ்சி என் சிவக்குமார் மற்றும் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “ஐடி துறையில் ஓர் ஆண்டு காலத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஒரு மாவட்டத்திற்கு சராசரியாக 35 டன் பேப்பர் தேவைப்படுகிறது. இ ஆஃபீஸ் அமைப்பதன் மூலம் பேப்பர் சேமிப்பு ஏற்படும். அதோடு மரங்களை அழிப்பது குறையும் என்றார்.
இதற்காக மாவட்ட அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இசேவை மையங்களில் 200 வகையான சேவை வழங்கப்படுகிறது. தமிழகத்தில் 200 இ-சேவை மையங்களில் இருந்து 300 ஆக மாற்றப்படும். 7 மாவட்டங்களில் ஐடி பார்க் அமைக்க அறிவித்துள்ள நிலையில் எஞ்சிய மற்ற மாவட்டத்திலும் படிப்படியாக அறிவிக்கப்படும். ஈரோட்டில் ஐடி பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தொடர்புத் துறைக்கு கடந்த காலங்களில் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ஆனால், தற்போது சாப்ட்வேர் மேம்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொடர்புத் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் செல்போன் டவர் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 8 மாதங்களில் தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களிலும் தடையில்லா இணையதள வசதி கிடைக்கும்”. இவ்வாறு அவர் பேசினார்.