பெண்கள், அறிமுகம் இல்லாத நபருடன் பழக்கம் வைத்துக் கொள்ளும் போது, உங்களின் தனிப்பட்ட தகவல்களை அவர்களிடம் பகிர வேண்டாம் என காவல்துறை எச்சரித்துள்ளது.
கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை செய்திக்குறிப்பில், ”சமீப காலமாக நல்ல வசதி படைத்த தனிமையில் இருக்கும் பெண்களுடன் நட்பு வளர்த்துக் கொண்டு, அவர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் சிலர் ஈடுபடுவதாக தெரிய வருகிறது. எனவே, தனிமையில் இருக்கும் பெண்கள் அறிமுகம் இல்லாத அல்லது முன்பின் தெரியாத நபர்களுடன் பேசி பழக்கம் வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும்.
அவ்வாறு பழகினால் தங்களைப் பற்றி தனிப்பட்ட தகவல்களை அவர்களிடம் பகிராமல் இருப்பது நல்லது. இதுபோன்ற நபர்களால் பிரச்சனைகளை சந்தித்தால், மாநகர காவல்துறையில் புகார் அளிக்கலாம். இது போன்ற புகார்களில் பெண்களின் பெயர்களை ரகசியமாக வைக்கப்படும். மேலும், மாநகர காவல்துறை சார்பில் பெண்கள் புகார் அளிக்க வசதியாக, பிரத்யேக க்யூஆர் கோடு அடங்கிய விழிப்புணர்வு பிரசுரங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், மாநகர காவல்துறை பக்கத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் இரவு பணி முடிந்து தனியாக செல்லும் பெண்கள் பாதுகாப்பை மேம்படுத்த பொதுமக்களிடம் மாநகர காவல்துறை சார்பில் கருத்து கேட்கப்பட்டு வருகிறது. இதற்காக பிரத்யேக க்யூஆர் கோடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த க்யூஆர் மூலம் பொதுமக்கள் தங்களது கருத்துக்களைப் பதிவு செய்யலாம். இதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு பணி முடிந்து செல்லும் பெண்கள் போக்குவரத்தில் செல்லும் போது பாதுகாப்பாக உணர்கிறீர்களா? இரவில் தனியாக செல்லும் போது நீங்கள் எப்பொழுதாவது துன்புறுத்தலை அனுபவிக்கிறீர்களா? எனப் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதனைப் பொதுமக்கள் அல்லது பெண்கள் பயன்படுத்திக் கொண்டு பூர்த்தி செய்யலாம்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More : “எப்போதும் போதையில் உலா வரும் சுறாக்கள்”..!! அதுவும் கொக்கைனாம்..!! விஞ்ஞானிகள் அதிர்ச்சி கண்டுபிடிப்பு..!!