தபால் அலுவலக சேமிப்பு திட்டமானது, முதலீட்டில் நிலையான வருமானத்தை வழங்கும் பரந்த அளவிலான திட்டங்களை உள்ளடக்கியுள்ளது. குறிப்பாக, அரசாங்க உத்தரவாதத்துடன் கூடிய நிரந்தர வைப்புத் தொகையில் மாதாந்திர வருமானத்தைப் பெறும் திட்டங்களில் அச்சமின்றி முதலீடு செய்யலாம். அந்த வகையில், போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பான திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டம் (MIS) என்றால் என்ன?
7.4% வட்டி விகிதத்தை வழங்கும் தபால் அலுவலகத்தின் அதிக வருவாய் ஈட்டும் திட்டங்களில் இதுவும் ஒன்று. இத்திட்டத்தின் மூலம் முதலீட்டாளர்கள் மாதந்தோறும் பணத்தை எடுக்கலாம். இந்த முதலீட்டுத் திட்டத்தில், ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், இரண்டு அல்லது மூன்று நபர்களுடன் கூட்டாக தொடங்கப்படும் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம்.
லாக்-இன் காலம்:
நீங்கள் ஒரு தபால் அலுவலகத்தில் மாதாந்திர வருமானத் திட்டம் கணக்கைத் தொடங்கினால், குறைந்தது 5 ஆண்டுகள் முடியாமல் அந்தக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை உங்களால் எடுக்க முடியாது. அதே நேரத்தில், இது மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து அதன் மூலம் மாத வருமானம் பெறலாம்.
அவசர பண தேவை:
ஒரு முதலீட்டாளர் எந்த சூழ்நிலையிலும் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வருடத்திற்கு முன் பணத்தை எடுக்க முடியாது. இருப்பினும், ஒரு வருடத்திற்குப் பிறகு, சில அவசரகால தேவைக்காக இந்த திட்டத்தை மூட விரும்பினால், அதற்காக நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
அக்கவுண்ட்டை மூடுவதற்கு எவ்வளவு அபராதம்?
முதிர்வுக்கு முன் பணம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த வசதியைப் பெறுவீர்கள். ஆனால், அதற்கு முன் பணத்தை எடுப்பது சாத்தியமில்லை. இருப்பினும், முதிர்வுக்கு முன்பாக கணக்கு மூடப்பட்டால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் நீங்கள் பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2% கழிக்கப்படும். அதே நேரத்தில், 5 ஆண்டுகள் முடிந்தபிறகு, பணத்தை எடுக்க விரும்பினால், உங்களுக்கு முழு தொகையும் கிடைக்கும்.
ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குப் பிறகும் உங்கள் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப, அசல் தொகையை திரும்பப் பெறலாம். கணக்கில் பெறப்பட்ட வட்டி ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும். தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்யும்போது TDS கழிக்கப்படுவதில்லை. இருப்பினும், உங்கள் கைக்கு வரும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
டெபாசிட்களின் வருமானம் என்ன?
நீங்கள் ரூ.5 லட்சத்தை தபால் அலுவலக எம்ஐஎஸ்ஸில் டெபாசிட் செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.3,083 சம்பாதிப்பீர்கள். அதிகபட்சமாக ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.5,550 சம்பாதிக்கலாம். கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தை முதலீடு செய்தால், இந்தத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 சம்பாதிக்கலாம்.
Read More : மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்..!! வருகிறது முக்கிய அறிவிப்பு..?