நாட்டின் 76 ஆவது சுதந்திர தின விழா நாளை மறுநாள் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் மும்முரமாக செய்து வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரையில், கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதே போல, தமிழ்நாடு முழுவதும் சுதந்திர தினத்தன்று, டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு, சுதந்திர தின விழா அன்று நடைபெறவுள்ள காவல் துறை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, காவல்துறையினர் ஒத்திகையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அதேபோல தமிழ்நாடு முழுவதும், பல்வேறு பகுதிகளில், பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், முக்கிய தலைவர்களின் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது.
அந்த வகையில், சென்னை விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் உட்பட, மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில், அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில், ஈடுபட்டு இருக்கிறார்கள்.
மேலும், தனியார் தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், கேளிக்கை விடுதிகள் போன்ற பகுதிகளில், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேபோல, தலைநகர் சென்னையில் இருக்கின்ற முக்கிய சாலைகளிலும், தடுப்புகளை அமைத்து, வாகன சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இதற்காக சென்னையில் மட்டும், சுமார் ஒன்பதாயிரம் காவல் துறையினர் மற்றும் தமிழ்நாடு முழுவதும் 40,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.