ஆகஸ்ட் 15ஆம் தேதியான இன்று, இந்தியா மட்டுமின்றி மேலும் 5 நாடுகள் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவை பொறுத்தவரை இன்று நாடு முழுவதும் 77-வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சுதந்திர போராட்ட வீரர்கள் தங்களது ரத்தத்தை வியர்வையாக சிந்தி ஆங்கிலேயரிடம் இருந்து 1947ஆம் ஆண்டு வாங்கி தந்த சுதந்திரத்தை தேசம் முழுவதும் உள்ள 140 கோடி மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இன்று கொண்டாடி வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் உரை நிகழ்த்துவது வழக்கம். அந்தவகையில் இந்தாண்டு செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றி உரையாற்றினார். பிரதமர்கள் உரைக்கு முன் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செய்வது வழக்கம். அந்த வகையில், பிரதமர் மோடியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், இந்தியாவில் மட்டுமின்றி உலகின் வேறு சில நாடுகளும் இன்று சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றன. தென் கொரியா, வட கொரியா, காங்கோ, பெஹ்ரைன் மற்றும் லீக்டன்ஸ்டைன் ஆகிய நாடுகள் தான் இன்று சுதந்திர தினம் கொண்டாடுகின்றன. 1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜப்பானின் ஆளுகையில் இருந்து தென் கொரியா விடுபட்டது. இதேபோல் வட கொரியாவும் இன்று தான் தேசிய விடுதலை நாளாக கொண்டாடுகிறது.
1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆங்கிலேயரிடம் இருந்து பெஹ்ரைன் விடுதலை பெற்றது. அதேபோல் 1960ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரான்ஸிடம் இருந்து காங்கோ நாடு சுதந்திரம் பெற்றது. மேலும், சிறிய ஐரோப்பிய நாடான லீக்டன்ஸ்டைன் 1866ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜெர்மனியின் கட்டுப்பாட்டில் இருந்து விடுதலை பெற்றது குறிப்பிடத்தக்கது.