உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டுகிறது என ஐ.நா. அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலக மக்கள் தொகை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையடுத்து, ஐ.நா. பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறையின் மக்கள் தொகை பிரிவு, உலக மக்கள் தொகை கணிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “இந்த ஆண்டு மக்கள் தொகை தினம் மைல்கல் ஆண்டாக வருகிறது. இந்தாண்டு நவம்பர் 15ஆம் தேதி உலக மக்கள் தொகை 800 கோடியாக உயரும். 2030ஆம் ஆண்டு 850 கோடியாகவும், 2050ஆம் ஆண்டு 970 கோடியாகவும், 2080ஆம் ஆண்டு 1,040 கோடியாக உயரும். 2100ஆம் ஆண்டு வரை அதே அளவில் தொடரும்.
தற்போது, இந்திய மக்கள் தொகை 141 கோடியே 20 லட்சமாக உள்ளது. ஆனால், அடுத்த ஆண்டு இந்திய மக்கள் தொகை சீன மக்கள் தொகையை முந்திவிடும். தற்போதைய சீனாவின் மக்கள் தொகை 142 கோடியே 60 லட்சமாக உள்ளது. 2050ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை 166 கோடியே 80 லட்சமாக உயரும். மேலும், 2050ஆம் ஆண்டு வரை காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், டான்சானியா ஆகிய 8 நாடுகளில் உலக மக்கள் தொகையில் எவ்வளவு உயர்வு இருக்குமோ அதில் பாதிக்கும் மேல் மேற்கண்ட நாடுகளில் மக்கள் தொகை அதிகரிக்கும். உலக அளவில் மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 2019ஆம் ஆண்டின் கணக்கீட்டின் படி 72.8 வயதாக இருந்தது. ஆனால், 2050ஆம் ஆண்டு 77.2 வயதாக உயரும்.
தற்போது உலக மக்கள் தொகையில் 65 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு 10% ஆக உள்ளது. 2050ஆம் ஆண்டில் இது 16 சதவிகிதமாக அதிகரிக்கும். அதாவது ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை போல 65 வயது முதியவர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காக இருக்கும்”. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.