Hong Kong Six series: 7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள பிரபலமான ஹாங்காங் கிரிக்கெட் சிக்ஸ் தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ளது.
ஹாங்காங்கில் உள்ள டின் குவாங் ரோடு பொழுதுபோக்கு மைதானத்தில் நவம்பர் 1 முதல் 3ம் தேதி வரை தி ஹாங்காங் சிக்ஸ் தொடர் நடைபெறவுள்ளது. 20வது முறையாக நடைபெறும் இந்தாண்டு ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் இந்திய அணியும் பங்கேற்கவுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஹாங்காங் கிரிக்கெட் அணி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
7 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறவுள்ள இந்த தொடரில், இந்தியா, பாகிஸ்தான் உள்பட 12 அணிகள் பங்கேற்கின்றன. முன்னதாக லாரா, வாசிம் அக்ரம், சச்சின், தோனி, கும்ப்ளே ஆகிய கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்த தொடரில் விளையாடியுள்ளனர். மேலும் இந்த தொடரில் 2005ம் ஆண்டு இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் ஏற்கனவே ஃபஹீம் அஷ்ரஃப் தலைமையிலான தனது அணியை அறிவித்துள்ளது. இந்த தொடரில் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகள் வெற்றிகரமான அணியாக விளங்கி இருக்கிறது.
ஹாங்காங் சிக்ஸ் தொடரில் சில தனித்துவமான திருப்பங்களுடன் கிரிக்கெட் சட்டங்கள் பின்பற்றப்படுகிறது. அதில், ஒவ்வொரு போட்டியும் ஒரு அணிக்கு ஐந்து ஆறு பந்துகள் கொண்ட ஓவர்களைக் கொண்டிருக்கும், ஒவ்வொரு அணியிலும் ஆறு வீரர்கள் மட்டுமே இடம்பெறுவார்கள். விக்கெட் கீப்பரைத் தவிர அனைத்து வீரர்களும் ஒரு ஓவரை வீச வேண்டும். பேட்டர் 31 ரன்களை எட்டியதும் ஆட்டமிழக்காமல் ஓய்வு பெற வேண்டும்.
இந்த போட்டியில் சிக்ஸர்கள் அதிகமாக பறக்கும். அது மட்டுமில்லாமல் ஐந்து வீரர்கள் விக்கெட் இழந்தால் ஆறாவது வீரர் சிங்கிளாகவே பேட்டிங் செய்யலாம். இறுதிப் போட்டியில் மட்டும் ஒரு ஓவருக்கு எட்டு பந்துகள் வீசப்படும். வைடு மற்றும் நோ-பால் இரண்டு ரன்களாக கணக்கிடப்படுகின்றன.
Readmore: