செமிகண்டக்டர் துறையில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா விரைவில் முன்னேறும் என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
டாவோஸில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றத்தில் தொழில்துறை தலைவர்களிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி குறித்த இந்தியாவின் பார்வையையும் நாட்டின் குறிப்பிடத்தக்க வளர்ச்சியையும் எடுத்துரைத்தார். உற்பத்தி மற்றும் சேவைகள் இரண்டும் வளர்ச்சியை அதிகரிப்பதாக இருப்பதால் பொருளாதார மேம்பாட்டிற்கு இந்தியா எடுத்துள்ள சமச்சீரான அணுகுமுறையை அவர் விளக்கினார். இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் இவை இரண்டும் ஒருங்கிணைந்தவை. நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு இரு பிரிவுகளும் வளர்ச்சியடைய வேண்டும்.
மொபைல் போன்கள் இப்போது இந்தியாவில் பெரிய அளவில் தயாரிக்கப்படுவதாக அவர் கூறினார். மருந்துகள், ரசாயனங்கள், ஆடைகள் போன்ற துறைகளில் ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். சேவைத் துறையில் செயற்கை நுண்ணறிவு முக்கிய பங்கு வகிப்பதால், இதில் பயிற்சி அளிக்க சிறப்பு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். செமிகண்டக்டர் துறையில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த அஸ்வினி வைஷ்ணவ், செமிகண்டக்டர் துறையில் முதல் மூன்று இடங்களுக்குள் இந்தியா விரைவில் முன்னேறும் என்று தெரிவித்தார்