16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கியது. 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் லீக் சுற்று முடிவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் அணிகள் வெளியேற்றப்பட்டன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய 4 அணிகள் சூப்பர்4 சுற்றுக்குள் நுழைந்தன. சூப்பர்4 சுற்று முடிவில் இந்தியா முதலிடமும், இலங்கை 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இன்று இந்தியா மற்றும் இலங்கை மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று களமிறங்கிய இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள், இந்திய அணியின் பந்துவீசிச்சை சமாளிக்க முடியாமல் 15.2 ஓவர்களில் 10 விக்கெட்டையும் இழந்து 50 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் (17), துஷன் ஹேமந்தா(13) ஆகிய இருவரை தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்குடன் ஆட்டமிழந்துள்ளனர். இந்தியா தரப்பில் முகமத் சிராஜ் 6 விக்கெட்டுகளை எடுத்தார், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட், பும்ரா 1 விக்கெட் எடுத்தனர். குறிப்பாக இந்திய அணியின் பந்து வீச்சாளர் முகமத் சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட் எடுத்தார், மேலும் 16 பந்துகளில் 5 விக்கெட் எடுத்து சாதனையும் படைத்துள்ளார்.
51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணி வீரர்கள் சுப்மன் கில் 27, இஷான் கிஷன் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதன் மூலம் 10விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஆசிய கோப்பை இறுதி போட்டியில் வென்று கோப்பையை தட்டி சென்றது இந்தியா அணி. இன்றைய வெற்றியின் மூலம் 8வது முறையாக ஆசியக்கோப்பையை வென்றுள்ளது இந்தியா அணி.