fbpx

பற்றி எரியும் காட்டுத்தீ! களமிறங்கிய இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்!

உத்தராகண்டில் நைனிடால் நகர் அருகே ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை கட்டுப்படுத்த இந்திய விமான படைக்கு சொந்தமான இரண்டு ஹெலிகாப்டர்கள் உடனடியாக களம் இறக்கப்பட்டது.

உத்தராகண்ட் மாநிலம், ஹல்த்வானி மாவட்டத்தில் நைனிடால் மலைப் பகுதியில் வெப்பம் அதிகரித்துள்ளதால், காட்டுத் தீ பற்றி எரிந்து வருகிறது. நைனிடால் வனத்துறையினர், 36 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயைக் அணைக்க போராடி வரும் நிலையில், உதவிக்காக இந்திய விமானப்படை மற்றும் இந்திய ராணுவத்தை அழைத்துள்ளனர்.

இந்த காட்டுத் தீ நேற்று இரவு நைனிடால் நகரை அடைந்தது. ஏற்கெனவே, காட்டுத் தீயை கட்டுப்படுத்தும் பணியில் மாவட்ட நிர்வாகம், தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எனினும் காட்டுத் தீ நகர்ப்பகுதியை அடைந்துவிட்டதால், மலை நகரம் முழுவதும் புகை மூட்டமாக உள்ளது. தீ தொடர்ந்து கட்டுக்கடங்காமல் பரவி வந்ததால், அதனை தடுப்பதற்காக இந்திய விமானப்படைக்கு சொந்தமான எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டது.

’பாம்பி பக்கெட்’ என்று அழைக்கப்படும் ராட்சத பக்கெட்டுகள் மூலம் அருகில் உள்ள பிம்தால் ஏரியிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்றது. இதுபோன்று 12க்கும் மேற்பட்ட முறைகள் இந்த ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது. இதையடுத்து முழுமையாக காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வனத்துறையினரும், தீயணைப்பு துறையினரும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நைனி ஏரியில் பொதுமக்கள் படகுகள் மூலம் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் குமாவோன் பகுதியில் 26 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக கர்வாலில் ஐந்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த காலகட்டத்தில் மொத்தம் 33.34 ஹெக்டேர் வனப்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. காட்டுத் தீ சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே ருத்ரபிரயாக்கில் காடுகளுக்கு தீ வைக்க முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்தப் பகுதியின் வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

Next Post

அதிரடி கைது.. மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் சிக்கிய பிரபல நடிகர்!

Sun Apr 28 , 2024
மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கில் நடிகர் சாஹில் கான் சத்தீஸ்கரில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சவுரப் சந்திரகர் மற்றும் ரவி உப்பால் ஆகிய இருவரும் இணைந்து, ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்டு மகாதேவ் என்ற பெயரில் சூதாட்ட செயலியை நடத்தி வந்தனர். இந்தச் செயலி மூலம் தினமும் ரூ.200 கோடி லாபம் ஈட்டிய அவர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகளுக்கு பெரும் தொகையை […]

You May Like