13 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சார்ந்த நபரை ஆஸ்திரேலிய போலீஸ் கைது செய்து இருக்கிறது. தற்போது அவர் மீதான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவின் சிட்னியில் வசித்து வருபவர் பலேஷ் தன்கர். குற்றம் சாட்டப்பட்ட இந்த நபர் சிட்னி ரயில்களுக்கான தரவு காட்சிப்படுத்தல் ஆலோசகராகவும், ஏபிசி மற்றும் ஃபைசர் நிறுவனங்களிலும் பணியாற்றி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிட்னியில் வாழும் இந்திய சமூகத்திடம் நன்கு அறியப்பட்ட இந்த நபர் பொய்யான வேலைவாய்ப்பு விளம்பரங்களை பயன்படுத்தி கொரியாவைச் சார்ந்த பெண்களை வலையில் வீழ்த்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறையின் விசாரணையில் “குற்றம் சாட்டப்பட்ட நபர் போலியான விளம்பர அறிவிப்புகளை செய்து இருக்கிறார். அதன்படி கொரிய மொழியிலிருந்து ஆங்கில மொழிக்கு தனக்கு மொழிபெயர்ப்பாளர்கள் தேவை என விளம்பரம் செய்து அந்த விளம்பரத்தை பார்த்து வேலைக்கு வரும் பெண்களை தனது அடுக்குமாடி குடியிருப்புக்கு அருகில் உள்ள ஹில்டன் மதுபான விடுதிக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மதுவில் ரோஹிப்னோல் மற்றும் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து அவர்களை மயக்கமடைய செய்து பின்னர் தன்னுடைய குடியிருப்புக்கு தூக்கி சென்று பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார். மேலும் இவரது பாலியல் சீண்டல்களை ரகசிய கேமராவின் மூலம் படம் பிடித்தும் வைத்திருக்கிறார். இது தொடர்பான காணொளி காட்சிகள் அவரது லேப்டாப்பில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுவரை 47 காணொளிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து இவர் மீது 13 பாலியல் வன்புணர்வு வழக்குகளும் மேலும் பெண்களுக்கு போதை மருந்து கொடுத்தது அவர்களது அனுமதி இன்றி அந்தரங்க காட்சிகளை படம் பிடித்தது என பல்வேறு வழக்குகளின் கீழ் இவர் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணையை சந்தித்து வருகிறார்.