டெஸ்ட் போட்டியில் இந்தியா ட்ரீம் 11 ஜெர்சியுடன் களமிறங்க உள்ளதையடுத்து, இந்திய வீரர்களின் ஜெர்சி போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்திய அணியின் ஜெர்சியை ரசிகர்கள் விமர்சனம் செய்துவருகின்றனர்.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று நடக்கிறது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2025 ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இந்த டெஸ்ட் தொடர் மூலமாக தொடங்குகிறது. இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இந்தியா ட்ரீம் 11 ஜெர்சியுடன் களமிறங்க உள்ளது. இதில் விளையாடும் இந்திய அணியின் ஜெர்சியில் புதிதாக ஸ்பான்சராக இணைந்துள்ள ட்ரீம் 11 இடம்பெற்றுள்ளது. இதையடுத்து ரோகித் சர்மா, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில் மற்றும் அஜிங்கியா ரஹானே ஆகியோர் ட்ரீம் 11 ஜெர்சி அணிந்து போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புதிய ஜெர்சியுடன் இந்திய அணி வீரர்களின் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியிடப்பட்டது. இந்த ட்ரீம் 11 இடம்பெற்ற புதிய ஜெர்சியை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர். இவ்வளவு மோசமான ஜெர்சியை பார்த்ததில்லை எனவும், இதற்கு பைஜூஸ் இருந்திருக்கலாம் எனவும் ட்விட்டரில் குமுறி வருகின்றனர். இனி இந்திய டெஸ்ட் ஜெர்சியில் முழுவதும் ட்ரீம் 11 லோகோ தான் இடம்பெறும், பாரம்பரிய வெள்ளை நிறத்துக்கு இடம் இருக்காது என ஒரு ரசிகர் பதிவிட, வீதிகளில் விளையாடும் வீரர்களின் ஜெர்சியே இதை விட நன்றாக இருக்கும், ட்ரீம் 11 இந்திய அணியின் ஜெர்சியை கெடுத்துவிட்டது எனவும் ரசிகர்கள் ட்விட்டரில் கலாய்த்து வருகின்றனர்.இந்திய அணியின் முதன்மை ஸ்பான்சராக பிரபல ட்ரீம் 11, ஜூலை 2023 முதல் மார்ச் 2026 வரை ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.