2024 அக்டோபர் 31-ம் தேதிக்குள் 50,000 தூய்மை இயக்கங்களை நடத்த இந்திய ரயில்வே தீர்மானித்துள்ளது.
தூய்மையைக் கடைப்பிடிப்பதற்கும், நிலுவையில் உள்ள குறைகளுக்கு தீர்வு காணவும், சிறப்பு இயக்கம் 4.0, ரயில்வே வாரிய மட்டத்திலும், அனைத்து கள அலுவலகங்கள் / அலகுகள் உட்பட ஒட்டுமொத்த இந்திய ரயில்வேயிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 16.09.2024 அன்று தொடங்கப்பட்ட ஆயத்த கட்டம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இயக்கத்தின் போது அடைய வேண்டிய இலக்குகள் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றன.
இயக்கத்தின் ஆயத்தக் கட்டத்தின் போது, இந்திய ரயில்வே 31.10.2024 வரை 50,000 தூய்மை இயக்கங்களை நடத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. இது முந்தைய சிறப்பு இயக்கம் 3.0-க்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட இரு மடங்காகும். தற்போதைய முகாமின்போது, நிலுவையிலுள்ள சுமார் 2.50 லட்சம் பொதுமக்களின் குறைகள் மற்றும் மேல்முறையீடுகளுக்கு தீர்வு காண சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்குகளை உடனடியாக முடிக்க அனைத்து மண்டல ரயில்வே / களப் பிரிவுகளுக்கு ரயில்வே அமைச்சகம் சிறப்பு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
மேற்கூறியவற்றைத் தவிர, டிஏஆர்பிஜி-யால் பரிந்துரைக்கப்பட்ட பல்வேறு அளவுருக்களில் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன, அதாவது நிலுவையில் உள்ள சுமார் 1000 எம்பி குறிப்புகள், அத்துடன் மாநில அரசு குறிப்புகள், பாராளுமன்ற உத்தரவாதங்கள் மற்றும் பிரதமர் அலுவலக குறிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன, அவை சாதனை கட்டத்தில் அதாவது அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31, 2024 வரை சிறப்பு இயக்கம் 4.0 -ன் போது தீர்க்கப்படும். ஆவண மேலாண்மைக்கான இலக்கு சுமார் 85 ஆயிரம் நேரடி மற்றும் சுமார் 20 ஆயிரம் மின்-கோப்புகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.