இந்தியாவின் முதல் நாசி வழி தடுப்பூசியான இன்கோவேக் ஜனவரி 26-ம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது..
கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.. முதல் மற்றும் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தப்படுவதுடன், பின்னர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், நோய் பரவலையும் இந்த தடுப்பூசிகள் தடுக்கும் என்று நம்பப்படுகிறது..
இந்நிலையில் நாசி வழியே கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சியில் பாரத் பயோடெக் நிறுவனம் ஈடுபட்டு வந்தது.. அதன்படி, அந்த நிறுவனத்தின் நாசி வழி தடுப்பூசியான இன்கோவேக் ( iNCOVACC) தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு நிறுவனம் சமீபத்தில் அவசரகால ஒப்புதல் வழங்கியது.. நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்கோவேக் தடுப்பூசி பூஸ்டர் டோஸாக பயன்படுத்தப்பட உள்ளது.. தனியார் மருத்துவமனைகளுக்கு இதன் விலை ரூ.800 என விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.. அரசு மருத்துவமனகளுக்கு ரூ.325-க்கு இந்த தடுப்பூசி விற்பனை செய்யப்படும்..

இந்த நிலையில் இந்தியாவின் முதல் நாசி வழி தடுப்பூசியான இன்கோவேக், ஜனவரி 26 அன்று அறிமுகப்படுத்தப்படும் என்று பாரத் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கிருஷ்ணா எல்லா தெரிவித்தார். போபாலில் நடந்த இந்திய சர்வதேச அறிவியல் விழாவில் மாணவர்களுடன் உரையாடிய அவர் இந்த தகவலை தெரிவித்தார்..
நாசி வழி தடுப்பூசி எப்படி வேலை செய்கிறது..? நாசி வழி தடுப்பூசி டோஸ் மூக்கு வழியாக செலுத்தப்படுகிறது. தடுப்பு மருந்தை நேரடியாக சுவாசப் பாதையில் செலுத்துவதே இதன் நோக்கம் ஆகும்.. வைரஸ் பொதுவாக மூக்கு வழியாக உடலுக்குள் நுழைகிறது.. எனவே நாசி தடுப்பூசி உடலின் நோயெதிர்ப்பு அமைப்புக்கு இரத்தம் மற்றும் மூக்கில் புரதங்களை உருவாக்க உதவுகிறது.. இது வைரஸில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.