இன்றைய காலகட்டத்தில் ஏசி என்பது இன்றியமையாத ஒன்றாகும். விமானங்களில் ஏசி இயங்காமல் நடுவானில் பறந்து கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அப்படி தான் சமீபத்தில் இண்டிகோ விமான போக்குவரத்தின் மூலம் விமானத்தில் பயணித்த பயணிகளுக்கு மோசமான அனுபவம் ஏற்பட்டுள்ளது.
சண்டிகரில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற விமானத்தில் ஏசி வேலை செய்யாமல் இருந்துள்ளது. ஒருவேளை விமானம் பறக்க தொடங்கியுடன் போடுவார்கள் போல என்று பயணிகளும் அமைதியாக இருந்துள்ளனர். ஆனால், விமானம் பறக்க துவங்கி தரையிறங்கும் வரை ஏசி இயங்கவே இல்லை. ஒரு விமான போக்குவரத்து என்று வரும்போது சேவைகளுக்கு ஏற்றவாறு பணம் வசூலிக்கப்படுகிறது. இப்படி இருக்க ஏசி இயங்காமல் விமானத்தை இயக்கியதுக்கு எந்த விளக்கமும் மற்றும் இழப்பீடும் கொடுக்கவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ட்விட்டர் மூலமாக பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமிர்தர் சிங் ராஜா என்பவர் பகிர்ந்திருந்தார். இதுவரை அந்த வீடியோ 8 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களால் பார்க்கப்பட்டுள்ளது. பலரும் அந்த வீடியோவின் கீழ் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.