ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்து உதவினர். ஆனால், ஐநா சபை 1947ஆம் ஆண்டு பாலஸ்தீனத்தில் இருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவு செய்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் நாட்டை உருவாக்கினர்.
பாதிப்படைந்த பாலஸ்தீனர்கள் தற்போது வரை இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் ஹமாஸ் அமைப்பு நடத்திய தற்போதைய தாக்குதலை அடுத்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்நிலையில், இஸ்ரேல் தாக்குதலில் 447 குழந்தைகள், 348 பெண்கள் உள்பட 1,417 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே தொடர்ந்து 7-வது நாளாக சண்டை நீடித்து வரும் நிலையில், காசாவில் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி தவித்து வருகின்றனர். இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.