11 ஆம் வகுப்பு வரலாற்றுப் பாடப் புத்தகங்களிலிருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் 370 வது பிரிவு தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளது..
11-ம் வகுப்பின் வரலாற்று புத்தகத்தில் இருந்து ஜம்மு மற்றும் காஷ்மீர் 370 வது பிரிவு தொடர்பான தகவல்களை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) நீக்கி உள்ளது. மேலும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய குறிப்புகளும் நீக்கப்பட்டுள்ளது.. 10வது அத்தியாயத்தில் ஜம்மு காஷ்மீர் தொடர்பான தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, “இந்திய யூனியனுடன் ஜம்மு காஷ்மீர் இணைவது அரசியலமைப்பின் 370 வது பிரிவின் கீழ் அதன் சுயாட்சியைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது”, என்ற தலைப்பு அகற்றப்பட்டுள்ளது.
இது தவிர புதிய என்சிஇஆர்டி புத்தகத்தில் நாட்டின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் பற்றிய குறிப்பு எதுவும் இல்லை. 11ம் வகுப்பின் புதிய அரசியல் அறிவியல் புத்தகத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளது.
NCERT பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்துப் பள்ளிகளுக்கும் இந்த விதி தானாகவே பொருந்தும். 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு தொடர்பான பாடப்புத்தகங்களும் மாற்றப்பட்டு, 10ம் வகுப்பு ‘ஜனநாயக அரசியல்-2’ புத்தகத்தில் இருந்து ‘ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை’, ‘மக்கள் போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள்’, ‘ஜனநாயகத்தின் சவால்கள்’ ஆகிய தலைப்புகள் நீக்கப்பட்டுள்ளன.
முன்னதாக கடந்த 3-ம் தேதி 6 முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்களை, என்சிஇஆர்டி குறைத்தது.. அதில் குறிப்பாக 2002 குஜராத் கலவரம், பனிப்போர் மற்றும் முகலாய பேரரசு தொடர்பான அனைத்து குறிப்புகளும் நீக்கப்பட்டது.. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது..