மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த் புரதத்தை சேர்ந்தவர் சுந்தர். இவரது அண்ணன் சோமு. இவர்களது பூர்வீக ஊர் விருதுநகர் அருகே உள்ள பாவாலி கிராமம். அண்ணன்-தம்பி இருவரும் விருதுநகர் மாரியம்மன் கோவில் திருவிழாவுக்கு வந்துள்ளனர். கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பூர்வீக வீட்டிற்கு சென்றுள்ளனர். மேலும், இருவரும் மது போதையில் வாக்குவாதம் செய்துள்ளனர். இதனால், அண்ணன் தம்பியை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அண்ணன் சோமுவை கைது செய்தனர். பின்னர், சோமுவை மருத்துவ பரிசோதனை செய்து விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் சோமுவுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் சோமுவை விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால், விருதுநகர் மாவட்ட சிறையில் உள்ள கைதிகளுக்கு, மருத்துவக் குழுவினர் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர்.