அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக் கருத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஓர் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, மிகவும் தரம்குறைவான மற்றும் இழிவான கருத்துக்களை பேசியிருந்தார். இந்த காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, மக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பொன்முடியை துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவித்தார். பின்னர், அமைச்சர் பொன்முடி தனது சர்ச்சைக்குரிய பேச்சுக்கு மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அமைச்சர் பொன்முடியை ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்வில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், சமீபத்தில் ஏற்பட்ட சில அரசியல் கருத்துரைகளுக்கு கடும் எதிர்வினை தெரிவித்தார்.
“சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா போன்ற தொற்றுநோய்களுடன் ஒப்பிட்டு பேசுவது, வெறும் விமர்சனம் அல்ல – அது கலாசார இனப்படுகொலையாகும்,” என அவர் குறிப்பிட்டார். அத்துடன், ஆளுங்கட்சியில் உயர் பதவியில் உள்ள ஓர் அமைச்சர், பெண்கள் குறித்தும், சிவன் மற்றும் விஷ்ணுவை வழிபடுவோரின் நம்பிக்கைகளையும் அவமதித்து பேசியதை ஆளுநர் கண்டித்தார்.
அவர் ஒரு தனி நபரல்ல; இந்தக் கலாசார சூழலுக்குள் ஓர் அடையாளமாகவே இருக்கிறார். கம்பராமாயணத்தில் பெண்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது. ஆனால் இப்போது, அந்த வழியை அழிக்கும் முயற்சிகள் நடந்துகொண்டு இருக்கின்றன,” என்றார். மத்திய அரசின் அணுகுமுறை குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தமிழையும் திருவள்ளுவரையும் ஒவ்வொரு மேடையிலும் உயர்த்திப் பேசுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
Read more: வக்பு சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் 2 பேர் கொலை.. போராட்டக் களமாகும் மேற்கு வங்கம்..!!