பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள மருத்துவர்களைக் கண்டறிய ‘Search for doctor app’ என்ற செயலியை தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது.
Search for doctor app-இல், அஞ்சல் குறியீட்டு எண் அல்லது பகுதியை உள்ளீடு செய்து தேடினால், அந்த பகுதியில் உள்ள மருத்துவர்கள் பட்டியல் கிடைக்கும். மேலும், மருத்துவர்களின் அனுபவம், எந்த துறையில் வல்லுநர் உள்ளிட்ட தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும். இதனால், அவசரக் காலங்களில் எளிமையாக மருத்துவர்களைக் கண்டறியும்படியாக இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் முதல்முறையாக இதுபோன்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
Search for doctor செயலியை நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், வடசென்னை மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சோமு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் வில்சன், ”இந்த செயலி மருத்துவத் துறையில் சீரமைப்பை ஏற்படுத்தப் போகிறது. மருத்துவர் தேடும் ஆப் மூலம் பக்கத்தில் தெருவில் உள்ள சிறந்த மருத்துவர் தெரியாமல் இருந்ததையும் கண்டறிந்து, நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவரை அவசரக் காலத்திலும் தொடர்பு கொள்ள முடியும். கொரோனா காலத்தில் அதிகளவில் போலி மருத்துவர்கள் வந்துள்ளனர். இதன்மூலம், போலி மருத்துவர்களை ஒதுக்கி விடலாம். தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து அனுபவம் வாய்ந்த மருத்துவர்களைக் கண்டறிந்து சிகிச்சை பெற முடியும், டிஜிட்டல் இந்தியா எனக் கூறும் நேரத்தில் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் டிஜிட்டல் மையமாக உருவாக்கி உள்ளது” எனக் கூறினார்.