ஐபிஎல் தொடரில் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மகளிர் அணியின் ஜெர்சியுடன் விளையாடினர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் 22ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்தினார். அதன்படி, டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் 8 ரன், ஜெகதீசன் ரன் ஏதுமின்றியும் அவுட் ஆகினர். இதையடுத்து களமிறங்கிய ராணா 5 ரன், அடுத்து வந்த ஷர்துல் தாகூர் 13 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆகினர். இதையடுத்து ரிங்கு சிங் வெங்கடேஷ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த வெங்கடேஷ் அய்யர் 49 பந்தில் சதம் அடித்து அசத்தினார். கொல்கத்தா அணிக்காக 2008ம் ஆண்டில் சதம் அடித்த பிரண்டன் மெக்கல்லத்துக்கு பின்னர் சதம் அடித்த வீரரானார் வெங்கடேஷ் அய்யர்.
இறுதியில் கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷன் கிஷானும், இம்பேக்ட் பிளேயராக ரோகித் சர்மாவும் களம் இறங்கினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் 20 ரன்னில் ஆட்டம் இழந்தார். அதிரடியில் மிரட்டிய இஷன் கிஷன் 58 ரன்கள் அடித்த நிலையில் அவுட் ஆனார். இறுதியில் மும்பை அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்து தனது 2வது வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் தங்கள் மகளிர் அணியின் ஜெர்சியை அணிந்து விளையாடினர். ஏனென்றால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனான ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி, இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தி கடந்த மாதம் தொடக்க WPL கோப்பையை வென்றிருந்தது. நாட்டில் உள்ள பெண் குழந்தைகளின் விளையாட்டை தங்களின் கேரியரராக எடுத்துக்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், மும்பை இந்தியன்ஸ் மகளிரணியின் ஜெர்ஸியை அணிந்து வீரர்கள் விளையாடினர்.