பிரதமர் மோடி 2 நாட்கள் பயணமாக சென்னை வந்தபோது, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த காவல்துறை அதிகாரிகளுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மாமப்புரம் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா மற்றும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க கடந்த 28ஆம் தேதி மாலை பிரதமர் மோடி சென்னை வந்தார். 2 நாட்கள் சென்னையில் தங்கியிருந்த பிரதமர் மோடி நேற்று நண்பகல் தனிவிமானம் மூலம் அகமதாபாத் நகருக்கு புறப்பட்டுச் சென்றார். இவரது வருகையை ஒட்டி சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. மேலும் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சென்னை விமான நிலையம், நேரு உள்விளையாட்டு அரங்கம், அடையார் ஐ.என்.எஸ் ஆகிய இடங்களைச் சுற்றி சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் 4 கூடுதல் ஆணையர்கள், 7 இணை ஆணையர்கள், 26 காவல் துணை ஆணையர்கள் என 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

மேலும், நேரு உள்விளையாட்டரங்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாநகருக்குள் பிரதமர் மோடி செல்லும் வழித்தடங்களில் 50 மீட்டர் இடைவெளிவிட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அதேபோல உயரமான கட்டிடங்கள், உயர் கோபுரங்கள் ஆகியவற்றிலும் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனர். மேலும், பிரதமர் மோடி வந்து செல்லும் இரு தினங்களும் சென்னை மாநகருக்குள் ட்ரோன்கள், ஆளில்லா சிறிய ரக விமானங்கள், ராட்சத பலூன்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் சுற்றுப்பயணத்திற்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கிய காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் காவல்துறையினரின் வாட்ஸ் அப் குரூப்பிற்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில், ”பிரதமர் மோடி 2 நாட்கள் சென்னையில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் போது தங்குதடையற்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்த காவல்துறை அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பெண் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் மிகச்சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் செயல்படுத்திய விதம் மிகவும் பாராட்டுக்குரியது’ என குறிப்பிட்டுள்ளார்.