நாடாளுமன்ற மக்களவை தேர்தல் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ளன. தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், தேர்தல் ஆணையம், அரசியல் கட்சியினரும் தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவை பொறுத்தவரை தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மற்றொரு பக்கம் அதிமுகவும், பாஜகவும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தனித்தனியாக ஈடுபட்டு வருகின்றன. எப்படியாவது தேமுதிகவை தங்களுடன் இணைத்துவிட வேண்டுமென எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் போட்டி போட்டு வருகின்றன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விரைவில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என தெரிவித்திருக்கிறார்.
இந்நிலையில் தான், காங்கிரஸ் சட்டமன்ற கொறடாவும், எம்.எல்.ஏ-வுமான விஜயதரணி பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசியலில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சட்டமன்ற தலைவர் பதவி வழங்காதது என அடுத்தடுத்த நிகழ்வுகளால் தற்போது இருக்கும் இடமே தெரியாமல் இருக்கிறார். இந்நிலையில், அவர் பாஜகவில் இணைந்து மக்களவை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.