தமிழ்நாட்டில் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு அத்தியாவசிய போக்குவரத்து சேவைகள் அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து கிராம பகுதிகளுக்கும் பஸ் பயண வசதியை ஏற்படுத்தி, தமிழகம் முழுவதும் தடையற்ற போக்குவரத்து சேவையும் அளித்து வருகிறது தமிழ்நாடு அரசு. அத்துடன், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு இலவச பஸ் பயணச்சலுகை, சாதாரண நகர கட்டண பஸ்களில், “மகளிர் கட்டணமில்லா பயணம்” திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.
அதுமட்டுமல்ல, கடந்த வாரம் கூட அமைச்சர் சிவசங்கர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதாவது, பெண்களுக்கான கட்டணமில்லா பஸ் பயணத்திட்டமான, விடியல் பயணத் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதை மலைப்பகுதியில் உள்ள பெண்கள் அனைவருமே பயனடையுமாறு விரிவுபடுத்த ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், அடுத்த குட் நியூஸ் ஒன்றை அறிவித்துள்ளார். அதாவது, உடல் பருமனானவர்கள் சிரமமின்றி பயணிக்க புறநகர் பேருந்துகளில் 5 இருக்கைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, அரசு போக்குவரத்துக் கழகத்தினால் இயக்கப்படும் புறநகர் பஸ்கள், போதிய இடைவெளியின்றி பயணிகள் பயணிக்க மிகவும் சிரமமாக இருந்து வருகிறது. இதனால், உடல் பருமனாக இருக்கக் கூடிய பயணிகள் புறநகர் பேருந்துகளில் நீண்ட தூரம் பயணிப்பது மிகுந்த சிரமத்தையும் ஏற்படுத்தி வந்தது.
இது தொடர்பான கோரிக்கை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இப்போது பேருந்துகளில் உள்ள இருக்கைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கெனவே, ஒவ்வொரு பஸ்ஸிலும், 5 இருக்கைகள் குறைக்கப்படும் என்றும், விரைவில் 4,000 புதிய பஸ்கள் வாங்கப்பட்டு நிர்ணயிக்கப்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.