தற்போது மக்களவை தேர்தல் நடந்தால் பாஜக 284 இடங்களையும், காங்கிரஸ் 68 இடங்களையும் கைப்பற்றும் என இந்தியா டுடே – சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் புதுப்புது வியூகங்களை வகுத்து வருகின்றனர்.. அந்த வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அரசியல் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சித்து வருகிறார்.. அதே வேளையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. ஆம் ஆத்மி இரு மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் தேசிய அளவிலான வியூகங்களை வகுப்பதாக தெரிகிறது..
இதனிடையே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த யாத்திரை மூலம் அவரை அடுத்த பிரதமர் வேட்பாளராக நிறுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது. இந்த பரபரப்புகளுக்கு மத்தியில், இன்று மக்களவைத் தேர்தல் நடந்தால் அடுத்த பிரதமர் யார் என்பதை அறிய இந்தியா டுடே-சி-வோட்டர் கருத்துக்கணிப்பு நடத்தியது. பொதுத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.. மொத்தம் 1,40,917 பேர் இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதில் பிரதமர் நரேந்திர மோடி இன்னும் நாட்டிலேயே மிகவும் பிரபலமான தலைவராக இருக்கிறார் என்றும், 72 சதவீதம் பேர் பிரதமரின் செயல்பாடு குறித்து திருப்தி தெரிவித்துள்ளனர் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்… மேலும் 37 சதவீதம் பேர் ராகுல்காந்தியின் தேசிய ஒற்றுமை யாத்திரை ஒரு சலசலப்பை உருவாக்கியது என்றும், ஆனால் மத்தியில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர உதவாது என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.. மேலும் தற்போது தேர்தல் நடந்தால் பாரதிய ஜனதா கட்சி 284 இடங்களையும், காங்கிரஸ் 68 இடங்களையும், மற்றவை 191 இடங்களையும் கைப்பற்றும் என இந்தியா டுடே – சிவோட்டர் மூட் ஆஃப் தி நேஷன் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதத்தை பொறுத்த வரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 43 சதவீத வாக்குகள் கிடைக்கும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 29 சதவீத வாக்குகளும், மற்றவர்களுக்கு 28 சதவீத வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.
கருத்துக்கணிப்பின் முக்கிய அம்சங்கள் இதோ :
- 67 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடு திருப்திகரமாக இருப்பதாகக் கூறியுள்ளனர்…
- 18 சதவீதம் பேர் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தின் மீது மக்கள் “அதிருப்தியில்” உள்ளதாக தெரிவித்தனர்..
- 20 சதவீதம் பேர் கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதே பாஜக அரசின் மிகப்பெரிய சாதனை என்று தெரிவித்தனர்.. அதே நேரத்தில் 14 சதவீதம் பேர் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது பிரிவை ரத்து செய்ததே பாஜக அரசின் சாதனை என்று தெரிவித்தனர்…
- அயோத்தியில் ராமர் கோயில் கட்டியது தற்போதைய அரசின் மிகப்பெரிய சாதனை என்று 12 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.
- பாஜக அரசின் மிகப்பெரிய தோல்வி எது என்ற கேள்விக்கு 25 சதவீதம் பேர் விலைவாசி உயர்வு என்றும், 17 சதவீதம் பேர் வேலையில்லாத் திண்டாட்டம் என்றும் கூறியுள்ளனர்.
- காங்கிரஸை புத்துயிர் பெற வைக்க ராகுல்காந்தியே பொருத்தமானவர் என்று 26 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் 17 சதவீதம் பேர் சச்சின் பைலட்டை ஆதரித்தனர்.