கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செஸ் விளையாடிவருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் மரோட்டிச்சல் என்ற கிராமம் அமைந்துள்ளது. சுமார் 5,000 மக்கள்தொகை கொண்ட இந்த கிராமம், சதுரங்க திறமைகளின் மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. பல தேசிய மற்றும் சர்வதேச செஸ் சாம்பியன்களை உருவாக்கியதன் மூலம் சதுரங்க கிராமம் என்ற புனைப்பெயரை இந்த கிராமம் பெற்றுள்ளது. இதற்கு எப்படி இந்த பெயர் வந்தது உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.
1990ம் ஆண்டில், இந்த கிராமத்தில் உள்ளூர் ஆர்வலர்கள் சிலரால் இந்த சதுரங்கப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது முதல் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு விளையாட்டைக் கற்பிக்க ஆர்வலர்கள் தொடங்கியுள்ளனர். நாளடைவில், இந்த செஸ் விளையாட்டின் புகழ் கிராமம் முழுவதும் படிப்படியாக வளர்ந்தது. அதன்படி, கிராமத்திற்குள்ளேயே பல சதுரங்க கிளப்புகள் தொடங்கி அதன் மூலம் அதிக அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், அனைத்து வயதினரும் கலந்துகொண்டு தங்கள் சதுரங்க திறமைகளை வெளிப்படுத்தும் வகையிலும், அடுத்தடுத்த சந்ததிகளும் அதில் சிறந்து விளங்க வேண்டும் என்றும் குழந்தைகளையும் ஊக்குவிக்கப்பட்டது.
அதுமட்டும் இல்லாமல் சிலர் சதுரங்க அரங்குகள் அமைப்பதற்காக நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். ஆண்டுதோறும் செஸ் போட்டிகளுக்கும் நிதி உதவி வழங்கி வருகின்றனர். இதனால் மரோட்டீச்சல் கிராமத்தில் இருந்து பல திறமையான செஸ் வீரர்களையும் பயிற்சியாளர்களையும் உருவாக்க முடிந்துள்ளது. இவர்கள் உள்ளூர் வீரர்களின் திறமைகளை மேம்படுத்த உதவியது மட்டுமல்லாமல், மற்ற இடங்களை சேர்ந்த ஆர்வமுள்ள செஸ் வீரர்களை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். மேலும் அனைத்து செஸ் விளையாட்டு நிலைகளிலும் இந்த கிராமத்தை சேர்ந்த நபர்கள் பங்கேற்று வரும் நிலையில், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்கள் உட்பட பல நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.