அதானி குழுமத்துக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 வாரங்களாக அதானி குழுமம் தொடர்ந்து மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. அதானி குழுமத்தில் எல்.ஐ.சி. முதலீடு செய்துள்ள நிலையில், எஸ்பிஐ வங்கியும் கடன் வழங்கியுள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அதானிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுன் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்து ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ”பிரதமர் மோடியால் கொண்டு வரப்பட எந்தத் திட்டமாக இருந்தாலும், வெளிப்படையாக டெண்டர் விடப்பட்டு தான் நிறைவேற்றப்படுகிறது. அதானிக்கு சாதகமாக நாங்கள் செயல்படவில்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தான் கபட நாடகம் போடுகின்றன.
ஒருபக்கம் போராட்டம் நடத்திவிட்டு, மறுபக்கம் அவர்கள் ஆளும் மாநிலங்களில் அதே நிறுவனம் துறைமுகம் உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்ற நிலம் வழங்கி வருகின்றன. நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. உள்ளே அமர்ந்து விவாதம் நடத்தாமல், வெளியே சென்று கத்திக் கொண்டிருக்கின்றனர். நாங்கள் இந்த விவகாரத்தில் எதையும் மூடிமறைக்கவில்லை. பங்கு சந்தையில் ஏற்ற இறக்கங்கள் இருப்பது இயல்புதான். நாட்டின் பொருளாதார கொள்கை மிகவும் வலுவாகவே இருக்கிறது. இதனால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை” என்றார்.