மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பணம் வராத பலரது விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு விவரங்களை சரிபார்க்கும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செப்.15ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதற்காக மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் பெற 3 கட்டங்களாக முகாம்கள் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இந்த விண்ணப்பங்கள் அரசிடம் உள்ள தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு, மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டு விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.65 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் குறுஞ்செய்தி பெறப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் இ-சேவை மையம் மூலம் வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடு செய்ய அறிவுறுத்தப்பட்டது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று அரசு அறிவித்தது.
அதன்படி, கடந்த அக்டோபருக்கான மகளிர் உரிமைத்தொகைக்கு பல்வேறு தகுதியான குடும்பத் தலைவிகள் கண்டறியப்பட்டு, கூடுதல் பயனாளிகளாக 5,041 பேர் இத்திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டனர். உரிமைத்தொகை பெற்றுக்கொண்டவர்களில் இறந்துபோனவர்கள் மற்றும் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்ட 8,833 பெயர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், தொடர்ந்து கள ஆய்வில் இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விண்ணப்பங்களில் உள்ள குடும்பத் தலைவிகளின் எண்களுக்கு தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்க்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்ட விவரங்கள் சரிதானா என கேட்கும் அதிகாரிகள், அது உறுதியானால் இந்த மாதம் உரிமைத் தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்.