ஒலிம்பிக் போட்டியில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வினேஷ் போகத்துக்கு எதிராக வேண்டுமென்றே சதி செய்து, அவரை இறுதிப்போட்டியில் விளையாடாமல் செய்துள்ளதாக சிலர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த குற்றச்சாட்டு அம்பானி குடும்பத்திற்கு சொந்தமான கோகிலாபென் அம்பானி மருத்துவமனையில் பணிபுரியும் நியூட்ரியனிஸ்ட் டாக்டர் டின்ஷா பார்டிவாலா மீதும் வைக்கப்பட்டுள்ளது.
அவர் தான் வினேஷ் போகத்தின் எடையை கவனிக்கும் நியூட்ரியனிஸ்டாக உள்ளார். அவர் யாரோ ஒரு சிலர் அறிவுரையின்பேரில் வினேஷ் போகத், இறுதிப் போட்டியில் ஆடக்கூடாது என்பதற்காக இந்த சதியை நிகழ்த்தியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது, வினேஷ் போகத் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருந்த பாஜகவைச் சேர்ந்த பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார் சுமத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்தாண்டு தொடக்கத்தில் நடந்த இந்த போராட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் கடந்து சென்றதுடன், காவல்துறை தடியடி நடத்தி போராட்டத்தையும் கலைக்க முயற்சித்தது. இதனால், மல்யுத்த வீரர்கள் மத்திய அரசு தங்களுக்கு கொடுத்த பத்ம விருதுகளை திருப்பிக் கொடுத்தனர். அதற்கு பாஜகவைச் சேர்ந்தவர்கள் வினேஷ் போகத் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சித்தனர்.
பாலியல் குற்றம் சுமத்தப்பட்ட பிரிஜ் பூஷனுக்கு ஆதரவாகவும் செயல்பட்டனர். இந்த விவகாரத்தை மனதில் வைத்து பிரிஜ் பூஷனுக்கு ஆதரவான பெரிய ஆட்கள் இப்போது மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதற்காக சதி செய்திருக்கலாம் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.