ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக எந்த தொகையும் நிர்ணயம் செய்யப்படவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கடந்த 2 நாட்களாக பத்திரிகைகளிலும், சமூக ஊடகங்களிலும் சில பதிவுகள் பகிரப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் வீடுகளுக்கு பொறுத்தப்படும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாதாந்திர கட்டணம் வசூலிக்கப்படும் என தவறான கருத்து பகிரப்பட்டு வருகிறது. இது தவறான கருத்தாகும். சமூக ஊடகங்களில் அரசியர் தலைவர்கள் சொல்வது ஏற்புடையது அல்ல. எந்த காரணத்தை கொண்டும் ஸ்மார்ட் மீட்டருக்கு மாத கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. கடந்த அதிமுக ஆட்சியில் 1.54 லட்சம் கோடி கடன் தொகையை உயர்த்தியது யார்? அந்த கடன் தொகைக்கு மாதம் 16 லட்சம் கோடி வட்டி கட்டியது யார்? மூன்றில் ஒரு பங்கு மின் உற்பத்தி செய்யப்பட்டு 3ல் 2 பங்கு மின்சாரத்தை வெளி சந்தையில் அதிக விலைக்கு வாங்கி மின்மிகை மாநிலம் என சொல்லிக் கொண்டனர்.

விவசாயிகளுக்கு மின் இணைப்பு கேட்டு 4.15 லட்சம் பேர் விண்ணப்பித்து காத்திருந்த போது அவர்களுக்கு மின் இணைப்பு ஏன் வழங்கப்படவில்லை?. தமிழ்நாடு மின்சார வாரியம் மூடக் கூடிய நிலைக்கு கொண்டு சென்றுவிட்டனர் முந்தைய அதிமுக அரசு. தற்போது மின் கட்டணம் உயர்வுக்காக போராட்டம் நடத்தும் அதிமுக பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை ஏற்றியதற்கு ஏன் போராட்டம் நடத்தவில்லை. அதை கேட்டு போராட்டம் நடத்த அவர்களுக்கு திராணி இல்லை. அடித்தட்டு மக்கள் பாதிக்கப்படாமல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்காக எந்த தொகையும் நிர்ணயம் செய்யப்படவில்லை”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.