தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவுவதாக பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. புதுச்சேரியில் மர்ம காய்ச்சல் காரணமாக பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மழைக்காலத்தில் ஏற்படக்கூடிய காய்ச்சல் பாதிப்பை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையின் சார்பில் கடந்த மாத இறுதியில் காய்ச்சல் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், டிசம்பர் மாத இறுதி வரை காய்ச்சல் முகாம்கள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் இதுவரை புதிய வகை வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், உரிய முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.