தமிழ்நாட்டுக்கும் எகிப்து பிரமிடுக்கும் உள்ள ஆச்சரியமான தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தமிழகமெங்கும் ஒவ்வொரு 100 கிலோமீட்டர் தூரத்திலும் ஒரு வானுயர கோபுரங்களைக் கொண்ட கோயில்கள் உள்ளன. இவை அனைத்தும் மிகவும் பழமையான கலாச்சார நம்பிக்கையின் அடையாளங்கள். இந்தக் கோயில்கள் உள்ளே எண்ணில் அடங்காச் சிலைகள் மற்றும் சிற்பங்களுமுள்ளன. அனைத்தும் எத்தனையோ கடவுள்களையும் பற்பல நம்பிக்கைகளையும் விளக்க முயல்கின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உவரியிலிருந்து பண்டாரவிளைக்கு ஒரு கிழவியைத் தாழியில் வைத்துச் சுமந்து வந்ததாகவும்; பின்னர் இந்தக் கிழவி இறந்ததாகவும்; இந்தக் கிழவியைத் தாழியுடன் புதைத்ததாக ஊர் மக்கள் நம்புகின்றனர். அந்த இடத்தில் கிழவி அம்மன் கோயில் ஒன்று கட்டப்பட்டு மக்கள் வழிபட்டு வருகின்றனர். இதன் காலத்தைக் கணக்கிட்டால் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் வரை தமிழகத்தில் இறந்தவர்களைத் தாழியில் வைத்து நல்லடக்கம் செய்துள்ளனர் எனக் கணிக்க முடிகிறது. நாயக்கர் காலத்திற்குப் பின்னர் இந்தத் தாழி பயன்பாடு படிப்படியாகக் குறைந்ததாகவே தெரிகிறது.
ஆங்கிலேயர்கள் வருகைக்குப் பின்னர் பெட்டியில் வைத்து அடக்கம் செய்யும் முறை பரவ ஆரம்பித்திருக்கும் என நம்புகிறேன். எகிப்திலும் தாழியில் வைத்து அடக்கம் செய்யும் பழக்கம் இருந்துள்ளது. மேலும் ஆதிச்சநல்லூரில் மற்றும் எகிப்தில் கிடைத்த தாழியின் வடிவமும் அது மூடப்பட்டுள்ள முறையிலும் அதிக ஒற்றுமையைப் பார்க்க முடிகிறது. நமது கோவில்களில் உள்ளது போல் பல கடவுள்களின் உருவங்கள் பிரமிடிலும் பொறிக்கப்பட்டுள்ளன.
அவைகளில் ஒன்று தலையில் சூரியனைச் சுமந்தவாராகயிருக்கும் கடவுள். இந்தக் கடவுளின் பெயர் “ரா”. இந்த ரா நம் சிவனை ஒத்துள்ளதாக கூறப்படுகிறது. ரா-வின் தலையில் உள்ளச் சூரியனில் ஒரு பாம்பு உள்ளது. இது நம் சிவனின் கழுத்தில் உள்ளப் பாம்புபோல் இருக்கிறது. ஆனால் சிவனின் தலையில் பிறை வடிவில் சந்திரன் இருக்கும். சிவனின் கையில் சூலாயுதம் உள்ளது போல் ரா-வின் கையிலும் ஓர் ஆயுதம் உள்ளது.
ஆனால் அந்தச் சூலாயுதத்தில் மூன்று கூர்மையான பகுதிகள் இல்லை. இருப்பினும் சூலாயுதம் ரா-வின் மனைவியின் தலையில் உள்ளது. அவள் பெயர் கதுர் (Hathor). நாம் சிவனின் பாதிதான் சக்தியென நம்புகின்றோம். அவர்கள் ரா-வின் பார்வையே அவரின் மனைவி கதுர்தானென நம்புகின்றனர். சக்தி இல்லை என்றால் சிவனால் இயங்க முடியாது. கதுர் இல்லை என்றால் ரா-வால் பார்க்க முடியாது. கண்ணில்லாத ரா-வால் இயங்க முடியாது என்பது உண்மை. கதுர் கையிலும் தலைகீழாகப் பிடித்த ஒரு சூலாயுதத்தை ஒத்த ஆயுதம் இருக்கின்றது. இங்கே பார்வதியின் கழுத்திலும் ஒரு பாம்பைப் பார்க்க முடியும்; அங்கே கதுர் தலையிலும் ஒரு பாம்பு மற்றும் சூரியனைப் பார்க்க முடிகின்றது.
உயிரைப் பறிப்பதற்கென்றே ஒரு கடவுள் அங்கும் உண்டு. அதன் பெயர் ஒசிரிஸ் (Osiris) அல்லது உசிர் (Usir) என அழைக்கப்படுகின்றது. இந்தக் கடவுளும் நம் எமன் பார்க்கும் வேலையைத்தான் பார்க்கிறார். உசிர் என்ற கடவுளின் சிலைகள் பிரமிடில் உள்ளது. கல்வி மற்றும் அறிவு சார்ந்த அம்சங்களை நிர்வாகம் செய்ய அங்கும் ஒரு பெண் கடவுள்தான் இருக்கிறது. அக்கடவுளின் பெயர் செசாட் (Seshat). நாம் சரஸ்வதி என்று அழைக்கின்றோம். செசாடின் தலையில் ஒரு தாமரை உள்ளது. நம் சரஸ்வதி தாமரையில் அமர்ந்திருப்பது நாம் அறிந்ததே ! நரி, பூனை மற்றும் பல பறவைகள் அங்குக் கடவுள்களாக வழிபடப்படுகின்றன.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் தேள் மற்றும் பாம்புகளைக் காண நேர்ந்தால் சங்கரன்கோவிலில் உள்ள கோமதி அம்மன் கோயிலுக்குச் செல்லுவது வழக்கமாகும். இந்தக் கோவில் வளாகத்தில் தேள் மற்றும் பாம்புகளின் வடிவத்திலான உலோகத் தகடுகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும். மக்கள் அதனை வாங்கி கோமதி அம்மனுக்குக் காணிக்கையாகச் செலுத்துவது வழக்கம். இவ்வாறாகக் கோமதி அம்மன் விஷப் பூச்சிகளிடமிருந்து தங்களைக் காப்பதாக நம்புகின்றனர்.
ஆச்சரியம் என்னவென்றால் எகிப்திலும் செர்கெட் (Serket) என்ற ஒரு பெண் தெய்வம் உள்ளது. தேள் மற்றும் பாம்புகளிடமிருந்து மக்களைக் காப்பதாக அந்த நாட்டு மக்கள் நம்பி வழிபடுகின்றனர். சொர்க்கம் மற்றும் நரகம் என்ற நம்பிக்கையும் அங்குள்ளது. பூமியில் வாழும்போது நல்லது செய்தால் சொர்க்கம் செல்வதாகவும், மாறாக பூமியில் வாழும்போது பாவம் செய்தால் நரகம் செல்வோம் என்ற நம்பிக்கையும் அங்குள்ளது.