சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக 5 திரைகள் கொண்ட பிவிஆர் திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு முன்கூட்டியே வந்து அதிக நேரம் காத்திருக்கும் பயணிகள், சென்னை வந்து இணைப்பு விமானத்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக இந்த திரையரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் அதிக நேரம் காத்திருக்கும் பயணிகளுக்கும், உறவினர் அல்லது நண்பர்களை வரவேற்கவோ, வழியனுப்பவோ காத்திருப்பவர்களுக்கும் இந்த திரையரங்குகள் நிச்சயம் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக அமையும்.
![சென்னை விமான நிலையத்தில் இப்படி ஒரு வசதியா..? இனி ஜாலியா படம் பார்க்கலாம்..!! இந்தியாவிலேயே முதல்முறை..!!](https://1newsnation.com/wp-content/uploads/2023/02/PVR.jpg)
5 திரைகள் கொண்ட இந்த திரையரங்குகளில் சுமார் 1,150 பேர் ஒரே நேரத்தில் படம் பார்க்கலாம். சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட்ட இணைப்பு பாலம் வழியாக திரையரங்கை அடையலாம். சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திரையரங்குகளை நடிகர் சதீஷ், ஆனந்த்ராஜ், கூல் சுரேஷ், இயக்குனர் வெங்கி, தயாரிப்பாளர் விஜய் பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 2,100 கார்கள் நிறுத்தக்கூடிய அளவில் மல்டி லெவல் கார் பார்க்கிங் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற வசதிகளும் விரைவில் செயல்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், கட்டி முடிக்கப்பட்டுள்ள உணவு விடுதிகள், சில்லறை கடைகள் விரைவில் திறக்கப்பட உள்ளன.