திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ”ஒரு நாள் மழைக்கே சென்னை நகரம் தாங்கவில்லை. எல்லா இடங்களிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. அதைச் சரிசெய்ய வேண்டிய அரசாங்கமோ, படகுகளையும், மீனவர்களையும் வாடகைக்கு எடுக்கிறது. ஒரு நாள் கூத்துக்கே இப்படியென்றால், டிசம்பரில்தான் பெருமழையைச் சந்திக்கப் போகிறோம்.அப்போது, தமிழ்நாடு எப்படி இருக்கப் போகிறது என்று நினைக்கும்போதே பயமாக இருக்கிறது.
அதேபோல, தீபாவளி பண்டிகைக்குக் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும். ஆனால், பேருந்துகள் இல்லாததால், தனியாரிடம் வாடகைக்கு எடுக்கின்றனர். இது மாதிரியான வாடகை அரசாங்கத்தை இதுவரை பார்த்ததில்லை. கஞ்சா, கள்ளச்சாராயம், போதை, டாஸ்மாக் எனப் பல்வேறு பிரச்சனைகளும் நிலவுகின்றன. மக்களுக்கு வேலைக் கிடையாது. விவசாயம் இல்லை. இவையெல்லாம் மாற வேண்டும். திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் எதையுமே இதுவரை நிறைவேற்றவில்லை.
`தமிழ்த்தாய்’ வாழ்த்துப் பாடல் விவகாரத்தைப் பெரிய சர்ச்சையாக்கி, ஆளுநரை அசிங்கப்படுத்துவது கண்டனத்துக்குரியது. தூர்தர்ஷன் சேனலைச் சேர்ந்த ஒருப் பெண் அந்தப் பாடலைப் பாடினார். அந்த இடத்தில் இருந்த ஆளுநரா பாட்டுப் பாடினார் அல்லது ஆளுநரா அப்படிப் பாடச்சொல்லி எழுதிக்கொடுத்தார். எனவே, மொத்தப் பழியையும் ஆளுநர் மீது தூக்கிப்போடுவது தவறான விஷயம்.
தூர்தர்ஷன் தரப்பு மன்னிப்புக் கேட்டு விட்டது. அதோடு இந்த பிரச்சனையை விட வேண்டும். எல்லோரும் தவறு செய்வது இயற்கை தானே. இன்று முதல்வராக இருக்கிற ஸ்டாலினே சுதந்திர தினம், குடியரசுத் தினத் தேதிகள் சொல்லத் தெரியாமல் திணறுகிறார். யாரும் மறந்துவிடவில்லை. ஆனாலும், தவறுகள் நடப்பது சகஜம்தான். இதை அரசியலாக்க வேண்டியத் தேவையில்லை’’ என்றார்.