தென்காசி மாவட்டம் உமையதலைவன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்புராமு (25). இவர் இந்திய ராணுவ வீரராக பணியாற்றி வரும் நிலையில், அண்மையில் விடுப்பு காரணமாக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு சுப்புராமு, பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். அதாவது அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு சுப்புராமு தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பெண், சுப்புராமுவை எச்சரித்துள்ளார். ஆனால், தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வந்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அப்பெண், சுப்புராமுவை கண்டபடி திட்டியுள்ளார். அப்பெண் ஆத்திரத்தில் சுப்புராமுவை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்புராமு, அந்தப் பெண்ணின் வீட்டுக்கு சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த அப்பெண் மிரட்டல் மற்றும் ஆபாச மெசேஜ் குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராணுவ வீரர் சுப்புராமுவை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.