நவீன காலகட்டத்திற்கு ஏற்ற வகையில் நம்முடைய ஆடை ,உணவு முறை, பழக்கவழக்கங்கள் எல்லாம் மாறிக்கொண்டே வருகின்றது. இந்த மாற்றங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால், இதனால் நம் வாழ்வியலையும், ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்றால் அதை தவிர்ப்பது நல்லது. அவ்வாறு நாம் தவிர்க்க வேண்டிய சிலவற்றை பற்றி நாம் பார்ப்போம்.
ஜீன்ஸ் பேண்ட் : இந்த மாடர்ன் உலகில் ஆண், பெண் என அனைவரும் விரும்பும் ஆடைகளில் ஒன்றாக ஜீன்ஸ் உள்ளது. இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் அடிவயிற்றுப் பகுதியில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் ஜீரண மண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், ஏப்பம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. அதுமட்டும் அல்லாமல் இடுப்பைச் சுற்றி மிகவும் கட்டுப்பாடான மற்றும் இறுக்கமான ஆடைகளை அணிவது உங்கள் இரத்த ஓட்டத்தை குறைக்கலாம். இது உங்கள் நரம்புகள் இதயம் மற்றும் பிற உறுப்புகளுக்கு இரத்தத்தை மீண்டும் செலுத்துவதை கடினமாக்குகிறது அதனால் நரம்புகளின் செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டு கடும் தலைவலி, மைக்ரேன் பிரச்சினைகளை உண்டாக்கும். இதை மருத்துவத்துறையினர் டைட் ஜீன் சிண்ட்ரோம் என்று கூறுகின்றனர்.
ஹேண்ட் பேக்: பெண்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக ஹேண்ட் பேக் முக்கிய பங்கு வகிக்கிறது. ஹேண்ட் பேக் பயன்படுத்துவதால் உடல் ஆரோக்கியம் கெடுமா என்றால் இல்லை. அதில் எவ்வளவு பொருட்களை வைக்கிறோம் என்பதின் மூலம் தான். ஆம் நாம் வெளியில் செல்லும் போது நமக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் தான். ஆனால் கைக்கு கிடைக்கும் எல்லாவற்றையும் ஹேண்ட் பேக்குகளில் போட்டு சுமந்து செல்கிறோம் . இப்படி எடுத்துச் செல்வதால் தோள்பட்டை வலி, கழுத்து வலி, கழுத்து எலும்புகளில் அழுத்தமும் வலியும் ஏற்படுதல், முதுகுத் தண்டில் வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படுகிறது.
ஹை ஹீல்ஸ்: ஹை ஹீல்ஸ் பயன்படுத்தும் பெண்களுக்கு கர்ப்பப்பை பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. ஹை ஹீல்ஸ் அணியும்போது குதிகால் சற்று உயரமாக இருக்கும். இதனால், நம் உடலானது சற்று முன்னோக்கி வளைந்து இருக்கும். உடலின் ஒட்டு மொத்த எடையை மூட்டு தாங்க வேண்டியிருப்பதால் மூட்டு வலி ஏற்படுகிறது .அதோடு பாதத்தின் முன் பகுதியில் மட்டுமே ஒட்டுமொத்த அழுத்தமும் போய் நிற்பதால் முதுகுத் தண்டு, முழங்கால் மற்றும் பாதங்களிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து ஹீல்ஸ் அணியும்போது உடல் அந்த மாற்றத்தை நிரந்தரமாக மாற்றமாக ஏற்றுக்கொள்ளும். இதனால், உடலின் கீழ் இடுப்புப் பகுதி பெரியதாகுதல், முதுகுப்பகுதி வளைதல் போன்ற பிரச்சினைகளும் ஏற்படலாம்.