காசா மருத்துவமனையின் மீது இஸ்ரேல் நடத்திய விமான தாக்குதலில் 500 பேர் உயிரிழந்ததையடுத்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் – பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதி மீது தரை, கடல், வான் வழியாக தாக்குதல் நடத்தினர். அன்றைய தினம் இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து 5,000-க்கும் மேற்பட்ட ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 1,200 ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் நுழைந்து ஏராளமான இஸ்ரேலியர்களை சுட்டுக்கொன்றனர். பலரை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இதைத் தொடர்ந்து ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இரு தரப்புக்கும் இடையே 11வது நாளாக போர் நடக்கும் சூழலில் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 2,808 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,859 பேர் காயமடைந்துள்ளனர் என்று பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 254 பாலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் 64 சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். அதேபோல மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் உட்பட 37 மருத்துவ ஊழியர்கள் இறந்துள்ளனர்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இதுமட்டுமல்லாமல், நள்ளிரவில் காசாவில் உள்ள அஹ்லி அரபு மருத்துவமனையைத் தாக்கிய இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் 500 பேர் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அல்-அஹ்லி மருத்துவமனையின் புகைப்படங்கள், உடைந்த கண்ணாடி மற்றும் உடல் பாகங்கள் உள்ளிட்ட புகைப்படங்களை வெளியிட்டு 500 பேர் கொல்லப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இடைவிடாத தாக்குதல்களிலும் இங்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள், பொதுமக்கள் மருத்துவ சிகிச்சையை பெற்று வருகின்றனர். இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேல் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போதைய இஸ்ரேலின் இத்தாக்குதலைத் தொடர்ந்து ஜோ பைடனுடனான சந்திப்பை ரத்து செய்வதாகவும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார்.