லெபனானின் பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தை உள்பட 6 பேர் பலியானதாக லெபனான் அரசு தெரிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டது. ஏழு வார போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெறவில்லை. இந்த நிலையில் காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் இன்னும் அதிகரிக்கப்படும் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது.
தெற்கு லெபனானின் டெளலைன் பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நேற்று (சனிக்கிழமை) இரவு நடத்திய தாக்குதலில் ஒரு குழந்தை உள்பட 6 பேர் பலியாகினர். 10க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதேபோன்று கடற்கரையையொட்டிய டையர் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சிரியா எல்லையையொட்டியுள்ள ஹாவ்ஷ் அல்-சையத் அலி பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்தத் தகவலை லெபனான் அரசு ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
வடக்கு இஸ்ரேலின் எல்லை நகரமான மெதுலா பகுதியை குறிவைத்து 6 ஏவுகணைகளை வீசி லெபனான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தத் தாக்குதலை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் ஆதரவுப் படைகள் நிலைகொண்டுள்ள லெபனானின் பல்வேறு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டிருந்தார்.
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா சண்டையில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லெபனான் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலைச் சேர்ந்த 60 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Read more: வீக்கெண்டில் குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. வாகன ஓட்டிகள் நிம்மதி..!!