Israel – Hamas war: கடந்த 15 மாதங்களாக நடைபெற்றுவந்த மோதலுக்கு மத்தியில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும் பெண்கள் சிறுவர்கள், முதியவர்கள் என்று 250க்கும் மேற்பட்ட இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களை ஹமாஸ் அமைப்பினர் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இதனிடையே பதிலுக்கு ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு இதுவரை 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதுவரை இந்தப் போரில் 150க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருந்தது.
போர் நிறுத்தம் செய்யுமாறு ஹமாஸ் அமைப்பையும், இஸ்ரேலையும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இருப்பினும் இரண்டு பேரும் அதற்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்து தாக்குதலை நடத்திக்கொண்டே வந்தனர். இதனிடையே கடந்த ஆண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டின் காரணமாக, 100க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால், 150க்கும் மேற்பட்ட பணயக்கைதிகள் தற்போதுவரை ஹமாஸின் கட்டுப்பாட்டிலேயே இருந்தனர். பணயக்கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேல் நிர்வாகம் 1650 வரையான பாலஸ்தீன கைதிகளை சிறையில் இருந்து விடுவிக்க உள்ளது. அதாவது ஹமாஸ் விடுவிக்கும் ஒவ்வொரு பொதுமக்களுக்காக 30 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவிக்கும்,
இந்த நிலையில், பிணை கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் காரணமாக 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தத்தை தொடர்ந்தும், ஹமாஸ் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததையடுத்து காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.