ஹமாஸ் ஐ.எஸ். ஐ.எஸ் போன்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் நசுக்கப்பட்டது போலவே ஹமாஸ் இயக்கமும் விரைவில் நசுக்கப்படும் என்று போரில் கொல்லப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை பகிர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார்.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த மோதல் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஹாமாஸ் படையினர் இஸ்ரேல் மீது தொடுத்த திடீர் தாக்குதலே இதற்கு காரணம் ஆகும். ஹமாஸ் அமைப்பினரின் ராக்கெட்டுகள் மழை போல இஸ்ரேல் மீது பொழிந்தன. இந்த தாக்குதலால் நிலைகுலைந்து போன இஸ்ரேல், ஒரு மாதிரி சமாளித்துக் கொண்டு இப்போது பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் அங்கே பதற்றமான சூழல் நிலவுகிறது. காசா நகரம் மீது வான்வழி தாக்குதலை நடத்தி வரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது.
காசாவை முழுவதுமாக முற்றுகையிட்டுள்ளதாக அறிவித்துள்ள இஸ்ரேல், உணவு பொருள், எரிவாயு விநியோகம், மின்சாரம் ஆகியவற்றையும் முடக்கியுள்ளது. இதனால், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் அடிப்படைத் தேவைகள் இன்றி கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளார்கள். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் தொடங்கி 6 நாட்கள் ஆகியுள்ளது. இந்த போரால் தற்போது வரை இஸ்ரேலில் 1,200க்கும் மேற்பட்டோரும் , காசாவில் 1,100 க்கும் மேற்பட்டோரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உச்சக்கட்ட போருக்கு இடையே ஹமாஸ் தீவிரவாதிகளால் குழந்தைகள் கொல்லப்பட்டதாக இதுகுறித்த புகைப்படங்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கனிடம் காண்பித்தார். இந்தநிலையில், இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தள பதிவில், ஹமாஸ் மனிதாபிமானமற்றது. ஹமாஸ் ஒரு ஐ.எஸ்.ஐ.எஸ்” என்று பகிர்ந்துள்ளது.
ஹமாஸ் ஐ.எஸ். ஐ.எஸ் போன்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் நசுக்கப்பட்டது போலவே ஹமாஸ் இயக்கமும் விரைவில் நசுக்கப்படும். ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரை எப்படி நடத்தினோமோ அதுபோலவே ஹமாஸ் இயக்கத்தினரையும் நடத்த வேண்டும். எந்த ஒரு தலைவரும் ஹமாஸ் அமைப்பினரை சந்திக்கக் கூடாது. யாரும் புகலிடமும் கொடுக்கக் கூடாது” என்றார் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆவேசமாக கூறியுள்ளார்.