சோழிங்கநல்லூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு சக ஊழியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு ஆண்கள், பெண்கள் என இரு தரப்பு பணியாளர்களுக்கும் இரவுநேர பணியில் ஈடுபடுவது வழக்கம். இதனால், பெண்களும் இப்போது அதிகளவில் இரவு பணிக்கு சென்றுவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் இளம்பெண்ணுக்கு சக ஐடி நிறுவன ஊழியரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரைப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.

நள்ளிரவு இவர் பணியை முடித்து விட்டு அங்குள்ள ஒரு கடையில் டீ குடிக்க சென்றுள்ளார். அதே கடைக்கு தெலங்கானாவை சேர்ந்த சாம் சுந்தர் (29) என்ற ஐ.டி. ஊழியரும் டீ குடிக்க வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கு சாம் சுந்தர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதை அங்கேயே இளம்பெண் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சாம் சுந்தர், தவறும் செய்து விட்டு அப்பெண்ணை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதையடுத்து, அப்பெண் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளித்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த செம்மஞ்சேரி காவல்துறையினர், சாம்சுந்தரை கைது செய்து பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.